வங்கியில் நகைக்கடன் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள்
நகைக் கடன் (Jewel Loan)
பணத்தேவை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு நகைக்கடன் ஒரு வரப்பிரசாதமாகும். நகைக்கடன் பெறுவதற்கு நகையை வங்கியில் அடமானம் வைத்து கடனை பெற வேண்டும். யார் வேண்டுமானாலும் நகையை அடமானம் வைத்து கடன் பெறலாம்.வங்கி நமக்கு வழங்கும் சேவைகளிலேயே மிகவும் எளிதான மற்றும் சுலபமான வழிமுறைகளை கொண்ட ஒரே சேவை நகை கடன் பெறுவதாகும்.
நகை கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை ?
நகை கடன் பெறுவதெற்கென்று தனியாக எந்த ஒரு ஆவணமும் வங்கியில் ஒப்படைக்க தேவை இல்லை. ஆனால் நகை கடன் பெற விரும்புவோர் தனது பெயரில் உள்ள Passbook யை ஆவணமாக காண்பிக்க வேண்டும். எனவே வங்கியில் தனது பெயரில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தால் மட்டுமே நகைக்கடனை பெற முடியும். வங்கியில் நகைக்கடன் பெறுபவருக்கு இதற்கென தனியாக Loan Card வழங்கப்படும்.
நகை மதிப்பீடு எவ்வாறு கணக்கிடப்படும் ?
நகையின் சந்தை விலை (Market Value) பொறுத்தே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகையின் மொத்த எடையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 90% எடை அளவுக்கே கணக்கிடப்படும். நகையின் எடையை கணக்கிட்டு ஒவ்வொரு கிராம் நகைக்கு குறிப்பிட்ட தொகை கடனாக வழங்கப்படும். ஆனால் கல் வைத்த நகையை அடமானமாக வைத்து கடன் பெறும் பொழுது கல்லின் எடை முழுவதுமாக கழிக்கப்படும்.
Hallmark முத்திரையிடப்பட்ட நகையை அடமானம் வைக்கும் போது Hallmark முத்திரையில்லாத நகைக்கு பெறும் கடனில் ரூ. 50/- அல்லது ரூ. 100/- வரை ஒவ்வொரு கிராமிற்கும் கூடுதலாக கிடைக்கும். மிகவும் பழைய தங்க நகை என்றால் நகையின் கழிவு போக மீதம் உள்ள எடையில் நகையின் தரத்தை பொருத்தும் தங்கத்தின் அளவை பொருத்தும் நகையின் மதிப்பை கணக்கில் எடுத்து கொண்டு நகை கடன் வழங்கப்படும்.
நகை மதிப்பீட்டாளர் (Appraiser)
வாடிக்கையாளர் அடமானம் வைக்கும் நகையின் மதிப்பை வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் பரிசோதிப்பார். அவரே நகையின் தரம் மற்றும் எடையை நிர்ணயிப்பார். அதன் பின்னரே நகைக்கடன் கணக்கிடப்படும். எனவே நகைக்கடன் பெறும் பொழுது Appraising Charge என்று தனியாக ஒரு குறிப்பிட்ட தொகை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும்.
நகைக்கடன் எத்தனை வருடத்திற்குள் செலுத்த வேண்டும்?
வங்கியில் நகைக்கடனை முழுவதுமாக திருப்பி செலுத்த நிர்ணயிக்கப்படும் காலம் ஒரு வருடம் ஆகும். நகைக்கடன் பெற்று ஒரு வருடத்திற்குள் முழுவதுமாக அசல் மற்றும் வட்டியை கட்டி நகையை திருப்பிக்கொள்ள வேண்டும்.
வட்டி கணக்கிடப்படும் முறை?
பொதுவாக நகை கடனில் மற்ற கடன்களை போன்று கூட்டு வட்டி வசூலிப்பதில்லை சாதாரண வட்டியே வசூலிக்கப்படும். வட்டிக்கு வட்டி என்று வசூலிக்கப்படாது. எனவே நகை கடனில் வாடிக்கையாளர் கட்டும் வட்டி தொகை மற்ற கடன்களை காட்டிலும் குறைவாகவே இருக்கும். வருடம் முடியும் போது மொத்தமாக வட்டி மற்றும் அசல் தொகையை கட்டி முடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வருடத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நகையை திருப்ப விரும்பினால் நகை கடன் பெற்ற நாள் முதல் அன்றைய நாள் வரை மட்டும் வட்டி வசூலிக்கப்படும்.நகைக்கடனில் மாதந்தோறும் வட்டி கட்டியே ஆகவேண்டிய அவசியமில்லை.
நகைக்கடனை புதுப்பிக்கலாமா? (Renewal செய்யலாமா?)
கட்டாயமாக ஒரு வருடத்திற்குள் வங்கியில் பெற்ற நகைக் கடனை வட்டி முதலுமாக கட்டி முடிக்க வேண்டும். இயலாத பட்சத்தில் வங்கியிலிருந்து நகைக் கடனை புதுப்பித்துக்கொள்ளலாம் (Renewal). ஆனால் கடனை Renewal செய்யும் பொழுது கண்டிப்பாக வட்டி முழுவதையும் செலுத்த வேண்டும். உதாரணமாக மே மாதம் நகைக் கடன் பெற்றிருந்தால் அடுத்த வருடம் மே மாதத்தில் கடனை Renewal செய்யலாம்.
கடனை செலுத்தி நகையை மீட்பது எப்படி? Redemption of Jewels
நகைக்கடன் பெற்று ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக வட்டி மற்றும் அசலை முழுமையாக செலுத்தி நகையை மீட்டுக் கொள்ளலாம். நகையை மீட்டவுடன் Loan Card யை வங்கியிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
நகைக் கடனை அடைக்காத போது வங்கி எடுக்கும் நடவடிக்கை என்ன?
வாடிக்கையாளர் நகைக் கடன் பெற்று ஒரு வருடம் முடிந்த பிறகும் நகை கடனை புதுப்பிக்கவோ அல்லது மீட்கவோ (Renewal or Redemption) இல்லையென்றால் வாடிக்கையாளருக்கு வங்கியிலிருந்து அறிவிப்பு (Notice) அனுப்பப்படும். மேற்படி அறிவிப்பில் நகைக் கடனை திரும்ப செலுத்தாததால் வாடிக்கையாளரால் அடமானம் வைக்கப்பட்ட நகை குறிப்பிட்ட தேதியில் ஏலத்திற்கு விடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதிக்குள் மேற்படி கடனை திரும்ப செலுத்தி நகையை மீட்டுக் கொள்ளலாம். ஆனால் வாடிக்கையாளர் எதற்கும் முன்வராத பொழுது குறிப்பிட்ட தேதியில் நகை ஏலத்திற்கு விடப்பட்டு வங்கியின் கடன் அடைத்து கொள்ளப்படும். கடன் அடைத்தது போக மீதப்பணம் இருந்தால் அதை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படும்.