CDM மூலம் டெபாசிட் செய்த பணம் கணக்கில் ஏறவில்லையா? டெபாசிட் செய்த பணத்தை பெற என்னென்ன வழிமுறைகள்?
நவீன காலத்தில் நாம் அனைவரும் அனைத்து வேலைகளையும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய விரும்புகிறோம். அது போல வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல சேவைகளை வங்கி நமக்கு வழங்கி வருகின்றது. அதில் பணத்தை ATM இயந்திரத்தில் எடுப்பது போல CDM மூலம் டெபாசிட் செய்யும் சுலபமான முறையும் ஒன்றாகும். மேற்படி சேவையின் மூலம் வாடிக்கையாளரின் நேரம் விரையம் ஆகாமல் இருப்பது போன்ற பல நன்மைகள் இருந்தாலும் சில நேரங்களில் CDM இயந்திரத்தில் டெபாசிட் செய்த பணம் கணக்கில் வரவு ஆகாமல் போய்விடும். இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர் எவ்வாறு புகார் செய்யலாம்? டெபாசிட் செய்த பணத்தை எப்படி பெறலாம் போன்றவைகளை பற்றி விரிவாக பார்ப்போம்……
1. முதலாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ல் புகார் செய்வதற்கான மாதிரி படிவத்தை கிளிக் (Click) செய்ய வேண்டும். அதில் உள்ள மாதிரி புகார் ஐ பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.
2. பிறகு புகாரில் விடுபட்டுள்ள இடங்களில் சரியான தகவல்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக வாடிக்கையாளரின் பெயர், முகவரி, சேமிப்பு கணக்கின் விபரம், CDM மூலம் பணம் டெபாசிட் செய்த நாள், நேரம் போன்றவைகளை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.
3. வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) பூர்த்தி செய்யப்பட்ட புகாரை கொடுக்க வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கியில் புகார் கொடுத்து டெபாசிட் செய்த பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு பெற்றுக்கொள்ளலாம்
பின்வருபவை மேற்கூறிய புகார் தொடர்பான கேள்விகளும் பதில்களும் ....
1. யார் புகார் அளிக்க வேண்டும். - வங்கி கணக்கு வைத்திருப்பவரா அல்லது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தவரா?
பணத்தை CDM மூலம் டெபாசிட் செய்தவரே புகார் அளிக்க வேண்டும்.
2. எந்த வங்கியில் புகார் அளிக்கவேண்டும்?
பணத்தை டெபாசிட் செய்த CDM ஐ அதன் அருகில் உள்ள எந்த வங்கி செயல்படுத்துகிறதோ அந்த வங்கியிடம் புகார் அளிக்கவேண்டும்.
3. ஆவணங்கள் ஏதேனும் இணைக்க வேண்டுமா?
பூர்த்தி செய்யப்பட்ட புகாருடன் பணம் டெபாசிட் செய்ததற்காக CDM இயந்திரத்திலிருந்து வரும் ரசீதை புகாருடன் இணைத்து கொடுக்க வேண்டும்.
4. வாடிக்கையாளரே வங்கிக்கு நேரில் சென்று புகார் கொடுக்கவேண்டுமா?
பூர்த்தி செய்த புகார் மற்றும் ஆவணங்களோடு வாடிக்கையாளரே நேரடியாக வங்கிக்கு சென்று உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) புகாரினை கொடுக்க வேண்டும்.
5. CDM ல் டெபாசிட் செய்து கணக்கில் வரவு ஆகாமல் இருக்கும் போது அந்த பணம் வேறு யாருடைய கணக்கில் சேர்ந்து விடுமா ?
CDM ல் டெபாசிட் செய்து கணக்கில் வரவு ஆகாமல் இருக்கும் போது அந்த பணம் வேறு யாருடைய கணக்கிலும் சேராது. அந்த பணம் இயந்திரத்தில் ஒரு பெட்டிக்குள் பத்திரமாகவே இருக்கும். வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரித்து அந்த பணத்தை உரிய வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள்.
6. எத்தனை நாட்களில் கணக்கில் வரவு வைக்கப்படும் ?
புகார் கொடுத்த 2 முதல் 3 தினங்களில் வங்கி அதிகாரிகள் விசாரித்து புகாரின் உண்மை தன்மை பொறுத்து வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.