வங்கி சேமிப்பு கணக்கு (SB Account) துவங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள்



வங்கி சேமிப்பு கணக்கு SB Account என்றால் என்ன?

 

வாழ்க்கையில் முக்கியமான மற்றும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று பணமாகும். அந்த பணத்தை பாதுகாப்பாக முறையாக சேமித்து வைப்பதற்கு வங்கிகள் மற்றும் அதில் தொடங்கும் வங்கி கணக்குகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பொதுவாக, வியாபார நோக்கமில்லாமல் தனிநபர் பணபரிவர்த்தனைக்காக வங்கிகள் சேமிப்பு கணக்கு (SB Account) எனும் சேவையை வழங்குகிறது.         

 

சேமிப்பு கணக்கை தொடங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது பணத்தை எப்போது வேண்டுமானாலும் போட்டு வைத்தும், தேவையின் போது எடுத்தும் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் வங்கியில் போட்டு வைக்கும் பணத்தைப் பொருத்து வட்டி மூலம் இலாபமும் ஈட்டலாம்.

 

வங்கி சேமிப்பு கணக்கு SB Account எங்கு தொடங்கலாம்?

 

பொதுவாக வாடிக்கையாளர்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையில் கணக்கை தொடங்குவதே பணபரிவர்த்தனைக்கும் வங்கியின் பிற சேவைகளை பெறுவதற்கும் மிகச்சிறந்தது. வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு வங்கியில் அதற்கென்றே படிவம் வழங்கப்படும். படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

SB Account தொடங்க தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?

 

வங்கியில் கணக்கை தொடங்குவதற்கான படிவத்தை பூர்த்தி செய்யும் பொழுது பெயர், விலாசம், தொலைபேசி எண், கையெழுத்து போன்ற முக்கியமான விபரங்களை மிக கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களையும் உடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

1.  ஆதார் கார்டு

2.  பான் கார்டு

 

மேற்கண்ட ஆவணங்களோடு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் 3 அல்லது 4 உடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் மற்றும் பான் கார்டு இல்லாத சமயத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிம அட்டை, பாஸ்போர்ட் போன்ற மற்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம். சில நேரங்களில்  வங்கி கேட்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (Minimum Balance ) எவ்வளவு  இருக்க வேண்டும்?

 

சேமிப்பு கணக்கை தொடங்கும் போதே வாடிக்கையாளர் விரும்பும் தொகையை   (ரூ. 1,000/- க்கும் அதிகமாக) வாடிக்கையாளர் கணக்கில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். மேற்படி சேமிப்பு கணக்கின் மூலம் பண பரிமாற்றம் செய்யும் பொழுது குறைந்தது ரூ. 1,000/-  த்தை கணக்கில் இருப்பு உள்ளவாறு வைத்து கொள்ளவேண்டும். ஏனெனில் ரூ. 1,000/- க்கும் குறைவாக வங்கி கணக்கில் பணம் வைப்பு தொகையாக வைத்திருந்தால் அதற்கென தனியாக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை Minimum Balance Charge (மினிமம் பேலன்ஸ் சார்ஜ்) ஆக வாடிக்கையாளர் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். எனவே குறைந்தபட்ச தொகையாக ரூ. 1,000/-  த்தை கணக்கில் உள்ளவாறு பார்த்து கொள்ள வேண்டும். மேற்கூறிய ரூ. 1,000/- எனபது ஒவ்வொரு வங்கிக்கும் வங்கி அமைந்துள்ள நகரத்தை பொறுத்தும் மாறுபடும்.

 

ATM Card வாங்குவது எப்படி?

 

பணத்தை deposit செய்வதற்கும் பணத்தை கணக்கிலிருந்து எடுப்பதற்கும் வங்கிக்கு சென்று நேரத்தை செலவழிக்காமல் இருப்பதற்கு ATM சேவை பெரிதும் உதவுகிறது. ATM சேவையை பயன்படுத்துவற்கு வங்கியில் ATM கார்டை விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளரின் விண்ணப்பம் வங்கி ஏற்றுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் ATM கார்டை வாடிக்கையாளரை வங்கிக்கு நேரடியாக வரவழைத்தோ அல்லது வாடிக்கையாளரின் முகவரிக்கோ அனுப்பப்படும். மேற்படி வாடிக்கையாளரின் கணக்கு எண்ணிற்கென்று வழங்கப்படும் ATM கார்டை வங்கி அறிவுறுத்தும் வழிமுறைகளை பின்பற்றி பயன்படுத்திகொள்ள வேண்டும்.

 

Passbook என்றால் என்ன?

 

சேமிப்பு கணக்கை தொடங்கும் படிவத்தில் வாடிக்கையாளர் குறிப்பிடும் விபரங்கள் மற்றும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி கிளையின் பெயர் விலாசம் போன்ற முக்கியமான விபரங்கள் அனைத்தும் Passbook ல் இடைபெறும். Passbook என்பது வாடிக்கையாளர் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளும் குறிக்கப்படும் புத்தகம் ஆகும். இதை வாடிக்கையாளர் தங்களது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி Passbook யை வங்கிக்கு எடுத்து சென்று கணக்கில் மேற்கொண்ட பரிவர்த்தனைகளை வாடிக்கையாளரே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

SB Account இல் வாரிசுதாரரை (Nominee) நியமிப்பது எப்படி?

 

வாடிக்கையாளர் அனைவரும் சேமிப்பு கணக்கை துவங்கும் போது படிவத்தில் Nomination என்ற பகுதியை மிக கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். Reserve Bank of India (RBI) விதிமுறைகளின் படி கண்டிப்பாக படிவத்தில் Nominee யை நியமித்தே ஆக வேண்டும்.  கணக்கு ஆரம்பிக்கும் பொது Nominee யை நியமிக்கவில்லை என்றால் நேரடியாக வங்கியை அணுகி nominee நியமித்து கொள்ளலாம்.

 

Nominee ஆக 18 வயது பூர்த்தி அடைந்தவரை மட்டுமே நியமிக்க வேண்டும். வங்கியில் கணக்கு வைத்துள்ளவர் இறந்துவிட்டால் Nomination  ல் குறிப்பிட்ட நபரால் மட்டுமே  கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியும். எனவே Nominee ஆக குடும்ப உறுப்பினர்களையோ அல்லது நம்பிக்கையான நபர்களை மட்டுமே குறிப்பிடுவது நல்லது.

 

குழந்தைகளின் பெயரில் SB Account தொடங்கலாமா? 

 

18 வயது பூர்த்தி அடையாத குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையும் வரை கணக்கு வைத்திருக்கும் குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலமே கணக்கை செயல்படுத்த வேண்டும். குழந்தைகள் நேரடியாக வங்கியை அணுகி எந்தவிதமான சேவைகளையும் பெற முடியாது. தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரருடன் இணைந்து வந்தால் மட்டுமே கணக்கை தொடங்க அல்லது பிற சேவைகளை பெற முடியும். கண்டிப்பாக குழந்தைகளின் பெற்றோர் பெயரில் அல்லது பாதுகாவலர் பெயரில் அதே வங்கியில் கணக்கு இருத்தல் வேண்டும்.

 

வட்டி மூலம் இலாபம் பெறுவது எப்படி?

 

வங்கியில் சேமிக்கும் பணத்திற்கு 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை வங்கியிலிருந்து நேரடியாக வட்டியாக குறிப்பிட்ட சதவீதம் (3% முதல் 5/%)  வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு அனுப்பப்படும். உதாரணமாக வாடிக்கையாளர் தனது கணக்கில் ரூ.1,00,000/- இருப்பு வைத்திருந்தால் அவருக்கு வட்டியாக ரூ. 3,000/- வரை கணக்கில் வரவு வைக்கப்படும். மேற்படி வட்டி ஒவ்வொரு வங்கிக்கும் வங்கி அமைந்துள்ள நகரத்தை பொறுத்து மாறுபடும். எனவே வங்கி கணக்கை முறையாக பயன்படுத்துவதன் மூலம் கையிலிருக்கும் பணத்தைக் கொண்டே இலாபமும் ஈட்ட முடியும்.