வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்



படித்தவர் முதல் பாமரர் வரை வங்கியில் பணம் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ உள்ள நடைமுறைகள் தெரியாமல் வங்கியில் யாரிடமாவது கேட்டு தான் செய்கிறோம். சரியான கவுண்டர் எது, Challan(பணம் செலுத்தும் படிவம்)-ல் எப்படி எழுத வேண்டும், Denomination (ரூபாய் மதிப்பு)-ல் எவ்வாறு கணக்கிட்டு நிரப்ப வேண்டும் போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது போன்ற சந்தேகங்கள் வராமல் எளிமையாக வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பின்வரும் வழிமுறைகள் பின்பற்றினாலே போதும். அவை என்னென்ன வழிமுறைகள் என்பதை வரிசையாக காண்போம்...

 

1.    வங்கிக்கு சென்று பணம் டெபாசிட் செய்வதற்கு அதற்கென தனியாக உள்ள பணம் செலுத்தும் கவுண்டரை (Cash Counter) வங்கி ஊழியர்களிடம் விசாரித்து வரிசையில் நிற்க வேண்டும்.

 

2.    பணத்தை டெபாசிட் செய்வதற்கென்று உள்ள Challan ஐ வங்கியிடமிருந்து கேட்டு பெற்று கொண்டு, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

 

3.    டெபாசிட் Challan ல் SB Account, Loan Account, RD Account இவற்றில் எந்த கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய போவதை சரியாக மார்க் (Tick) செய்ய வேண்டும்.

 

4.    Challan ல் டெபாசிட் செய்யும் தேதி, டெபாசிட் செய்யப்படும் கணக்கின் கணக்கு எண், கணக்கின் பெயர், பணம் செலுத்துபவரின் தொலைபேசி எண், டெபாசிட் செய்யப்படும் தொகையை எண்ணிலும் எழுத்திலும் சரியாக பூர்த்தி செய்து கையெழுத்து இடவேண்டும்.

 

5.    Challan ல் மிக முக்கியமான பகுதி Denomination பகுதி ஆகும். Denomination ல் வங்கியில் கொடுக்கும் மொத்த தொகையின் மதிப்பை ஒரே மாதிரியான ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை காசுகளாக பிரித்து அதன் எண்ணிக்கையை தனித்தனியாக நிரப்ப வேண்டும்.

 

6.    உதாரணமாக ரூ.5000/- த்தை டெபாசிட் செய்பவர் 500 ரூபாய் நோட்டுகள் 10 த்தை வைத்திருந்தால் Denomination பகுதியில் 500X10 என்று எழுத வேண்டும். அதே போன்று ரூ. 4950/- ஐ டெபாசிட் செய்யும் பொழுதும் 500 ரூபாய் நோட்டுகள் 10 த்தை வைத்திருந்தால் Denomination பகுதியில் 500X10 என்று தான் எழுத வேண்டும்.

 .

7.    டெபாசிட் Challan ல் Counter file (படிவத்தின் இடதுபுறம் உள்ள பகுதி)-ஐ வங்கியால் முத்திரை அடித்து வாடிக்கையாளரிடமே திருப்பி கொடுக்கப்படும். எனவே Challan ல் Counter file பூர்த்தி செய்யும் போது மிக கவனமாக கேட்கப்பட்ட அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். 

    

8.    பணத்தை டெபாசிட் செய்ததற்கான ஒரு சாட்சியாக Counter file ஐ வாடிக்கையாளர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 

9.    Challan ஐ பூர்த்தி செய்யும் போது தவறுதலாக ஏதேனும் பிழை ஏற்பட்டால் உடனே திருத்தம் செய்து அதன் அருகில் கையெழுத்து இடவேண்டும்.

 

10.   ஒரே நேரத்தில் பல்வேறு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டுமென்றால் அனைத்திற்கும் தனித்தனியாக Challan ஐ பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் Denomination ல் சரியான தொகை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

11.   பணம் டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்களே நேரில் வந்து பணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. யார் வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

 

12.   கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளையில் வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

 

13.   வங்கி கணக்குடன் PAN கார்டை இணைத்திருந்தால் (LINK) மட்டுமே ஒரே நேரத்தில் ரூ. 50000/- கும் அதிகமாக டெபாசிட் செய்ய முடியும், அவ்வாறு வங்கி கணக்குடன் PAN கார்டை இணைக்காமலிருக்கும் போது (Link செய்யாமலிருக்கும் போது) ரூ. 49,999/- வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். 

 

14.   பணத்தை டெபாசிட் செய்யும் பொழுது நோட்டுகளை அதன் மதிப்பு வாரியாக தனியாக பிரித்து வரிசையாக அடுக்கி செலுத்த வேண்டும். ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 100 ஐ விட அதிகமாக இருக்கும் போது அதை முன்புறம் மேலே தெரியுமாறு ஒரே மாதிரியாக அடுக்கி ரப்பர் பேண்ட் அல்லது நூலால் கட்டாக கட்ட வேண்டும்.

 

15.   இவ்வாறு ரூபாய் நோட்டுகளை சரியாக கட்டி கொடுத்திருந்தால் மட்டுமே பணம் எண்ணும் இயந்திரத்தில் பணத்தை வேகமாகவும், சுலபமாகவும் எண்ண முடியும். 

    

16.   பணம் எண்ணும் இயந்திரம் பணத்தை எண்ணும் போது கவனமாக அதை கண்காணிக்க வேண்டும். மிக கவனமாக கவனித்தால் மட்டுமே ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதை அந்த இடத்திலேயே சரிசெய்ய முடியும்.

 

17.   ரூ. 25,000/- வரை உடனடியாக கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் ரூ. 25,000/-- க்கு அதிகமான தொகையை டெபாசிட் செய்யும் பொழுது காசாளர் மற்றும் மற்றொரு வங்கி அதிகாரி அனைத்து விபரங்களையும் சரிபார்த்த பின்னரே கணக்கில் வரவு வைக்கப்படும்.

 

18.   ரூ. 25,000/- க்கு அதிகமான தொகையை டெபாசிட் செய்யும் பொழுது அதிகாரியின் பரிசோதனைக்கு பிறகே வரவு வைப்பதால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஆகலாம். எனவே கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்ற பரிசோதித்து வாடிக்கையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

19.   பணம் டெபாசிட் செய்தபின் பணபரிவர்த்தனையில் புகார் ஏதேனும் இருந்தால் அதை அன்றே வங்கியிடம் தெரிவித்தால் மட்டுமே பரிவர்த்தனையில் ஏற்பட்ட தவறை திருத்தம் செய்ய முடியும். மறு நாள் என்றால் கூட பிழையை திருத்தம் செய்ய முடியாது.

 

20.   ஒரு பெரிய தொகையை (உதாரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமாக) டெபாசிட் செய்யும் பொழுது வங்கி மேலாளரை அணுகினால் பணத்தை விரைவாக டெபாசிட் செய்ய வழிவகை செய்து தரப்படும்.

 

21.   பணம் செலுத்தும் தொகையில் சில்லரை ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் என Denomination அதிகமாக இருந்தால் கூட்ட நேரத்தில் காசாளரை உடனடியாக முழு தொகையை எண்ணி வரவு வைக்க வேண்டும் என்று வற்புறுத்த கூடாது.

 

22.   பணத்தை டெபாசிட் செய்யும் போது காசாளரிடம் வேறு விபரங்களையோ அல்லது சந்தேகங்களையோ கேட்டு அவரின் கவனத்தை சிதறவைத்துவிட கூடாது. அதற்கென தனியாக உள்ள வங்கி ஊழியர்களிடம் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மேற்கண்ட அனைத்து வழிமுறைகளும் கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சனை மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கலாம். மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் நமது நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல் வரிசையில் நமக்கு பின்னால் நிற்பவர்களுடைய நேரத்தையும் சேர்த்தே வீணாகும். எனவே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் பொழுது அதன் வழிமுறைகளை பின்பற்றி விரைவாக பணம் செலுத்திக்கொள்ளலாம்.